ஈக்குவடோர் நாட்டில் நேரலை ஒளிபரப்புச் செய்யப்பட்ட திருப்பலியின்போது, தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த பாரிய சிலுவை திடீரெனக் கழன்று விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்குவடோரின் குவாயாகில் (Guayaquil) நகரில் அமைந்துள்ள ‘சதா சகாய மாதா’ (Our Lady of Perpetual Help) தேவாலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தேவாலயத்தின் பங்குத் தந்தையான பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரி (Father Patricio Alfredo Sanchez Molinari), திருப்பலியை நடத்தி பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது, தேவாலயப் பீடத்துக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாரிய சிலுவை திடீரெனக் கழன்று, பலத்த சத்தத்துடன் அவர் மீது விழுந்துள்ளது. எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, அருட்தந்தையின் உயிரிழப்பு குறித்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குவாயாகில் பேராயர் பேரவை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், அருட்தந்தை பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில், தங்களின் அன்புக்குரிய அருட்தந்தை இறைவனின் இல்லத்துக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டு, அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரலைத் திருப்பலியின்போது இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருவதுடன், கத்தோலிக்க சமூகத்தினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
