மூத்த சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், கல்வியாளருமான திரு. சி.அ. ஜோதிலிங்கம் தனது 70ஆவது வயதில் கடந்த 09.10.2026 அன்று காலமானமை ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைக்கும், தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த முக்கியமான சிந்தனையாளரைத் தமிழ் சமூகம் இழந்துள்ளதாக அந்த இயக்கம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் அரசியல் சிந்தனைக்கு முக்கிய பங்களிப்பு
யாழ்ப்பாணம், குப்பிழான் கிராமத்தில் பிறந்த சி.அ. ஜோதிலிங்கம், இளமைப் பருவத்திலிருந்தே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் அக்கறை கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார்.
1970ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக உருவான தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்காற்றியதன் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய விடுதலை தொடர்பான சிந்தனைகளில் உறுதியாகச் செயல்பட்டு வந்தார்.
அரசியல் ஆய்வாளராக ஈழத்தமிழர் அரசியல், தமிழ்த் தேசியம், சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவர், சிக்கலான அரசியல் விடயங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கினார்.
பல தசாப்தங்களாக அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்ட நூல்களும் தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் குறிப்பிடத்தக்க அறிவுசார் பங்களிப்புகளாக விளங்குகின்றன.
மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்காகப் பணியாற்றியவர்
அரசியல் நிகழ்வுகளை வெறுமனே பதிவு செய்வதற்கு அப்பால், அவற்றின் பின்னணியையும் எதிர்கால விளைவுகளையும் ஆராய்ந்து மக்களிடையே அரசியல் தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதைத் தனது பணியின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
அதேவேளை, மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அரசியல், சமூக வாழ்வுடன் தொடர்புடைய கொள்கை விவாதங்களிலும் அக்கறையுடன் பங்களித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களில் அறிவுசார் தளத்திலிருந்து தனது கருத்துகளை முன்வைத்த அவரது பங்களிப்பும் நினைவுகூரத்தக்கது.
ஒரு மனிதர் மறைந்தாலும், அவர் உருவாக்கிய சிந்தனைகளும் எழுப்பிய கேள்விகளும் சமூகத்தில் ஏற்படுத்திய அறிவுத் தாக்கமும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என அந்த இயக்கம் தனது இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈடுசெய்ய முடியாத இழப்பு
சி.அ. ஜோதிலிங்கத்தின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமன்றி, தமிழ்த் தேசிய அரசியல் ஆய்வுத்துறை, கல்வியியல் மற்றும் சமூகச் செயற்பாட்டுத் தளங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விட்டுச்செல்லும் அறிவுசார் வெற்றிடத்தை நிரப்புவது எளிதானதல்ல என்றும், அவரது சிந்தனைகளும் சமூகப் பங்களிப்புகளும் தொடர்ந்து நினைவுகூரப்படும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஜோதிலிங்கத்தின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்வதுடன், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
