கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர், காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
அதிஉயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த போராட்டம் தொடர்பில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன்ற உத்தரவு, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் கண்டியிலிருந்து நடைபயணப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பிக்குமார் உள்ளிட்ட பலர், நேற்று முதல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதியில் தங்கியிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.