யாழ்ப்பாண போதைப்பொருள் வர்த்தகம்


போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள ரூ.1.5 கோடி பணமும், யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் அமைந்துள்ள ரூ.7 கோடிக்கும் அதிக பெறுமதியான இருமாடி வீடொன்றும் முடக்கப்பட்டுள்ளன.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த பணம் மற்றும் சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு நேற்று (15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி, யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் ரூ.1.5 கோடி பணத்துடன் லொறி ஒன்றையும் கைப்பற்றி, ஐந்து பேரைக் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போது, யாழ்ப்பாணம், மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தைக் கொண்டு ரூ.7 கோடிக்கும் அதிக பெறுமதியான இருமாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சொத்துக்கள் மற்றும் பணத்தின் மூலத்தைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.