டிஜிட்டல் கல்வி மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், கொமர்ஷல் வங்கி தனது 200ஆவது STEM வகுப்பறையை பாணந்துறை அகமெதி பாலிகா மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் 325,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தரம் 1 முதல் 13 வரை 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 110 ஆசிரியர்களையும் கொண்ட இப்பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கான செயன்முறை அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன ஸ்மார்ட் பலகை மற்றும் நவீன கற்றல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறை, முன்னர் போதியளவில் பயன்படுத்தப்படாத இடத்தை நவீன கற்றல் சூழலாக மாற்றியுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர்கள் STEM மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களைப் பல்மாத்ய உள்ளடக்கங்களுடன் கற்பிக்க முடிவதுடன், மாணவர்கள் கூட்டுக் கற்றல், நிரலாக்கம், ஊடாடும் உருவகப்படுத்துதல்கள் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.
கொமர்ஷல் வங்கியின் நீண்டகாலக் கல்வி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட 100 ஸ்மார்ட் STEM பாடசாலைகள் திட்டத்தின் மூலம் இந்த முயற்சி மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
அத்திட்டத்தின் கீழ் 100 பாடசாலைகளில் வகுப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு, தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், டிஜிட்டல் கற்றல் உள்ளடக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்களை கொமர்ஷல் வங்கி நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் 500,000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அகமெதி பாலிகா மகா வித்தியாலயத்தின் அதிபர் அனுராத வெலிகட, புதிய வகுப்பறை மாணவர்களின் கற்றலை மேலும் ஊடாடும், நடைமுறைச் சார்ந்த மற்றும் சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாணவிகளின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வங்கித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, டிஜிட்டல் புத்தாக்கம், கல்வி மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி சார்ந்த முயற்சிகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகின்றது.