‘போம்புவல சுத்தா’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபர், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு
க்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் காணப்பட்ட பதிவு இலக்கங்களை மாற்றிக் காட்டும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
