வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகள் ஊடாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த காற்றழுத்தத் தாழ்வுநிலையின் தாக்கம் இலங்கையின் வானிலையில் இன்று (25) முதல் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படலாம்.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவில் 35.7°C வெப்பநிலை பதிவு
இதேவேளை, நேற்று நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 பாகை செல்சியஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை முல்லைத்தீவு வளிமண்டளவியல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
.jpeg)