இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது! 7 மாகாணங்களில் தொடரும் உயர் அபாயம்

 இலங்கையில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேற்கு மாகாண சுகாதார சேவைகளுக்கான பதில் பிரதி மாகாண பணிப்பாளர் நாயகமும், நிபுணத்துவ வைத்தியருமான நவிந்த சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று (28) நிலவரப்படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், டெங்கு பரவல் அபாயம் முழுமையாக நீங்கவில்லை எனவும், பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏழு மாகாணங்களில் தொடரும் உயர் அபாயம்

இதேவேளை, நாட்டின் ஏழு மாகாணங்கள் தொடர்ந்தும் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்களாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதுடன், தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் நவிந்த சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதன் மூலமும், சுற்றுப்புறங்களில் நீர் தேங்குவதைத் தடுப்பதன் மூலமும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.