சூட்கேசுக்குள் உலர்ந்த நிலையில் முதலையின் தலை – இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்
இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படும் அபூர்வ வகை முதலையின் தலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலையின் தலையை எடுத்துச் சென்ற இத்தாலிய நபர் மீது அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் ஊடாக இத்தாலியின் துரின் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சர்வதேச அளவில் அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இத்தாலிய நிதிப் பொலிஸ் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து விமான நிலையத்தில் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதன்போது குறித்த பயணியின் சாமான்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சூட்கேஸுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த முதலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் தகவலின்படி, முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு, சாதாரண பேக்கிங் பேப்பரால் சுற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், முதலையின் இனம் மற்றும் அதனை எடுத்துச் சென்றதற்கான நோக்கம் குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.