சீன ஜனாதிபதிக்கு வொஷிங்டனில் சிவப்பு கம்பள வரவேற்பு: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலும் புதிய அறிவிப்பு




கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் வொஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.

கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்குள் இரு நாடுகளின் தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழமையான இராஜதந்திர நடைமுறைகளிலிருந்து மாறுபட்ட வகையில், அமெரிக்க ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் நேரில் சென்று சீன ஜனாதிபதியை வரவேற்றதுடன், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்புடன் கூடிய உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

மேலும், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு அரச விருந்தொன்றும் மாலை வேளையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சீன ஜனாதிபதியின் வொஷிங்டன் விஜயத்தை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பிலும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் காலாவதியாகவிருந்த அமெரிக்கா–சீனா வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான மற்றும் பாரியளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சீனா முன்வைத்துள்ள முன்மொழிவை பரிசீலிக்க வொஷிங்டன் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உயர்மட்ட உச்சிமாநாடு நடைபெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.