எல் நினோ சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை காரணமாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, குறித்த மாவட்டங்களில் 7,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களில் அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கரும், மொனராகலையில் 1,401 ஏக்கரும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கரும், அம்பாறையில் 1,055 ஏக்கரும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கரும் அடங்குகின்றன.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பயிர்ச் சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் கள அதிகாரிகள் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அடங்கிய குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய ஆறு பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையான பயிர்ச் சேதத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள், உடனடியாக தங்களது விவசாய அபிவிருத்தி நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் புத்தகத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதேச விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கள அதிகாரிகளைச் சந்தித்து தங்களது பயிர்ச் சேதங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் 1918 என்ற குறுஞ்செய்தி அல்லது அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
