ட்ரம்பை குறிவைத்த ஈரான்? வெளியாகியுள்ள உளவுத்துறை தகவல்கள்!!

 



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு இஸ்ரேல் பலமுறை அமெரிக்காவை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளை வெள்ளை மாளிகைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகள் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளிடம் நேரடியாகவும் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிடைத்த எச்சரிக்கைகளில், ட்ரம்பை துப்பாக்கி சுடும் நபர் மூலம் தாக்குவது அல்லது பெரியளவிலான பொது நிகழ்வொன்றில் கத்தியால் தாக்குவதற்கு ஒருவரை பயன்படுத்துவது உள்ளிட்ட சாத்தியமான சதித்திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 ஜூன் மாதம் இடம்பெற்ற 12 நாள் இஸ்ரேல்–ஈரான் போருக்கு முன்னரே இந்த எச்சரிக்கைகள் தொடங்கியதாகவும், பின்னர் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவை மேலும் தீவிரமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், ஜூலை மாதம் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டுக்கு முன்னதாக மிக விரிவான எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவரும், இந்த விவகாரம் குறித்து அறிந்த மற்றொருவரும் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க ஈரான் முயற்சிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை நீண்டகாலமாக மதிப்பிட்டு வருகிறது.

எனினும், கடந்த ஆண்டு தொடக்கம் இஸ்ரேலிய உளவுத்துறையால் பகிரப்பட்ட ட்ரம்பின் உயிருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களில் சிலவற்றை அமெரிக்க மத்திய உளவு அமைப்பான CIA-வால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.