மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க்கப்பல்: வீரர்களின் நிலை குறித்து கவலை.




 மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் பணியாற்றும் சில மாலுமிகள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் கப்பலில் பணியாற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் மனநலம் குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் இராணுவ செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், கப்பலின் நிலைமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மை நிலையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் நேற்று (14) தெரிவித்துள்ளார்.

250 நாட்களுக்கும் மேலாக பணியில் ஈடுபட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், கடந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் இருந்து தென் சீனக் கடல் நோக்கி புறப்பட்டது. பின்னர், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு முன்னதாக மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

கப்பலில் பணியாற்றும் வீரர்களின் சேவைக்காலம் ஆரம்பத்தில் மே மாதத்துடன் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது பலமுறை நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகால பணியமர்த்தல் உள்ளிட்ட காரணங்களால் கப்பலில் பணியாற்றும் வீரர்கள் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கப்பல் எப்போது தளத்திற்கு திரும்பும் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் திகதியும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சுழற்சி முறையின் அடிப்படையில், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனுக்கு பதிலாக யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வாஷிங்டன் விமானம் தாங்கிக் கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.