தற்போதைய வெள்ள நிலைமை சீராகும் வாய்ப்பு – நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு.



 நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மழை பதிவாகியிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனை பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், களனி கங்கையின் மேற்பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கித்துல்கல பகுதியில் சிறியளவு நீர்மட்ட அதிகரிப்பு காணப்பட்டாலும், அது ஆபத்தான நிலைமை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், களனி கங்கை சார்ந்த பகுதிகளில் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களு கங்கை, நில்வலா கங்கை, கிங் கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகிய நீர்நிலைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், தற்போது அவை அபாய நிலையை எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 25 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுவதால், ஆறுகளின் நீர்மட்டத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும் வெள்ள அபாயம் ஏற்படாது என சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் நாட்களில் ஈர வலயத்தின் மேல் சரிவுப் பகுதிகளில் அதிக மழை பெய்தால், ஏற்கனவே உயர்ந்த நீர்மட்டத்தில் உள்ள களனி கங்கை, களு கங்கை மற்றும் மகாவலி கங்கை பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.