தரமற்ற தலைக்கவசங்கள் விற்பனைக்கு; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்.




 தரச்சான்றிதழ் இல்லாத மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய கொழும்பிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலக விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிறுவனத்தில் இருந்து SLS 517 தரச்சான்று முத்திரை இல்லாத LSS ரக மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தலைக்கவசங்கள் ஒவ்வொன்றும் 1,800 ரூபா விலையில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது, பிரதிவாதியான நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அதற்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.