இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் குடல் நோய்கள் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!



இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினர் இயற்கை உணவுகளை விட செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வது இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடலுக்கும் மூளைக்கும் இடையில் சிக்கலான தொடர்பு காணப்படுவதாகவும், இது ‘குடல்–மூளை அச்சு’ (Gut-Brain Axis) என அழைக்கப்படுவதாகவும் வைத்திய நிபுணர் விளக்கமளித்துள்ளார்.

அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை குடலின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதனுடன், முறையற்ற உணவுப் பழக்கங்களும் இணையும் போது IBS (Irritable Bowel Syndrome – எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்திலிருந்து பல இளைஞர்கள் விலகி, எளிதில் கிடைக்கக்கூடிய செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் IBS உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.