டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 68 மரணங்கள் பதிவு!!

 

இலங்கையில் டெங்கு நோயினால் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98 சதவீதமானோர், அதாவது 48,244 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,406 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது மொத்த நோயாளர்களில் 21.31 சதவீதமாகும்.

கொழும்பு மாவட்டத்தில் 18,101 பேரும் (19.88%), கண்டி மாவட்டத்தில் 6,491 பேரும் (7.13%) டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டில் மாதாந்த அடிப்படையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மட்டும் 29,971 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 5,714 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டில் 119 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிஅபாய வலயங்களாக சுகாதாரத் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.