‘பேய்’ பீதியால் ஒரே நாளில் விடுதியை விட்டு வெளியேறிய 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!!



 இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அரச பழங்குடியின பாடசாலை விடுதியில் பரவிய பேய் பீதியால், 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நாளில் விடுதியை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி மாவட்டத்தின் மேல்காட் மலைப்பகுதியில் அமைந்துள்ள சிகல்தாரா பகுதியில், ‘டோமா’ அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பாடசாலை இயங்கி வருகிறது. இந்தப் பாடசாலையில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல், விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகள் நள்ளிரவு நேரங்களில் கொலுசு சத்தம் மற்றும் விசித்திரமான முனகல் ஒலிகள் கேட்பதாக விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சில மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததுடன், அழுது கொண்டே ஆக்ரோஷமாகச் சிரிப்பது உள்ளிட்ட அசாதாரண நடத்தைகளிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், பாடசாலை விடுதியில் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி வேகமாகப் பரவியுள்ளது. மேலும், அப்பகுதியில் இருந்த மரமொன்றை வெட்டியதால் ஏற்பட்ட கோபமே இதற்குக் காரணம் எனவும் சிலர் பல்வேறு தகவல்களைப் பரப்பியுள்ளனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த பெற்றோர், தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, அவர்களை உடனடியாக விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்படி, 345 மாணவிகள் மற்றும் 263 மாணவர்கள் என மொத்தம் 608 மாணவர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இதனால், ஒரே நாளில் பாடசாலை விடுதி பெருமளவில் வெறிச்சோடியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாவட்ட அரச பொது வைத்தியசாலையின் மனநல நிபுணர்கள் குழுவினர் பாடசாலைக்கு சென்று மாணவர்களைப் பரிசோதித்துள்ளனர்.

வைத்திய அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, இந்தச் சம்பவம் அமானுஷ்ய சக்தி அல்லது பேய் தொடர்பானது அல்ல என்றும், கடுமையான பயம் மற்றும் மனஅழுத்தத்தால் பலரிடமும் ஒரே நேரத்தில் உருவாகக்கூடிய ‘கூட்டு மனப்பிராந்தி’ (Mass Hysteria) நிலை காரணமாக இருக்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் வெளிப்படுத்தும் பயம் மற்றும் பதற்றம் மற்றவர்களிடமும் பரவி, அதேபோன்ற அறிகுறிகள் அல்லது அச்ச உணர்வுகள் உருவாகக்கூடிய நிலையாக இது கருதப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்களின் விளக்கத்தைத் தொடர்ந்து, அச்சம் படிப்படியாகக் குறைந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் விடுதிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.