முதலாவது விபத்து அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விடத்தல்தீவு 10ஆம் பிரிவிலுள்ள கிளை வீதியொன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த 7 வயது சிறுமி, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, மாத்தளை – ரத்தோட்டை வீதியின் வேரகம பகுதியில் நேற்று மாலை மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
மாத்தளை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண்ணும் அதில் பயணித்த குழந்தையும் பலத்த காயமடைந்துள்ளனர்.
இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புஞ்சி ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குறுகட சந்திக்கு அருகிலும் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
துறைமுகப் பகுதியில் இருந்து இங்குறுகட நோக்கிப் பயணித்த டிப்பர் லொறியின் முன்னால், பாதசாரிகள் கடவை வழியாக வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மூன்று விபத்துகள் தொடர்பிலும் பொலிஸார் தனித்தனியாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
