களனி கங்கை நீர்தர பாதிப்பு சீர்செய்யப்பட்டது – நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு.



 களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் ஏற்பட்ட நீர்தர பாதிப்பு தொடர்பான அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மீண்டும் நீர் விநியோகத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான நீரின் தரம் தொடர்பில் ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனைகளில், நீரின் தரம் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தலில், நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்குள் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பத்தரமுல்ல, கோட்டே, பாமன்கடை மற்றும் நுகேகொடை உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.