இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு: 7 மாதங்களில் 1,424 பேர் உயிரிழப்பு.

 



இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,355 பாரிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 108 ஆகவும், விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரதிகளின் கவனயீனம், அஜாக்கிரதை, அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், வீதிகளின் குறைபாடுகள் மற்றும் வாகனங்களை முறையாக பராமரிக்காததால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் முக்கிய காரணங்களாக காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் என தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 488 மோட்டார் சைக்கிள் சாரதிகளும், 484 பாதசாரிகளும் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் இவ்வாறான உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும், சாரதிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.