மேற்கிந்தியத் தீவுகளுக்கு 143 ஓட்டங்கள் இலக்கு? இலங்கை வலுவான நிலையில்.

 

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 142 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்து இறுதிநாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 549 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை அறிவித்தது.

இலங்கை அணிக்காக லஹிரு உதார அபாரமாக விளையாடி 248 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 188 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு துணையாக சொனல் தினூஷ 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 84 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும் சேர்த்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 499 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் 325 பந்துகளில் 180 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், ஷாய் ஹோப் 112 ஓட்டங்களையும், ஜான் கெம்ப்பெல் 72 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணிக்காக அசித்த பெர்னாண்டோ 130 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதுடன், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

50 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, லஹிரு உதார (0) மற்றும் நிஷான் மதுஷ்க (20) ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்தது.

எனினும், தினேஷ் சந்திமால் 40 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பதால், இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலையுடன் இறுதிநாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.