நீர்கொழும்பு சிறைச்சாலை அமைதியின்மை: பாராளுமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

 



நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்ட கடிதமொன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன், 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும், சம்பவத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு உடனடியாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் அவசர ஒத்திவைப்பு விவாதத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், பெண் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.