இரவு தூக்கத்தை மேம்படுத்தும் எளிய வழி.

 


இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் இரவு நேரத்தில் போதுமான தூக்கத்தை பெற முடியாமல் தவிக்கின்றனர். பணிச்சுமை மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சிலர் மருத்துவரின் ஆலோசனையுடன் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், தூக்கத்தை இயற்கையாக மேம்படுத்தும் புதிய எளிய வழிமுறை ஒன்று ஆய்வுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, இரவில் தூங்கும் போது கால்களில் சாக்ஸ் (socks) அணிந்து தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆராய்ச்சிகளின்படி, கால்கள் கதகதப்பாக இருக்கும்போது இரத்த நாளங்கள் விரிவடைந்து, உடல் வெப்பநிலை சீராகக் குறைகிறது. இது மூளைக்கு “தூங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற சைகையை அனுப்பி, விரைவாக தூக்கம் வர உதவுகிறது.

தென் கொரியாவின் சியோல் தேசிய பல்கலைக்கழக ஆய்வில், இரவில் சாக்ஸ் அணிந்து தூங்கியவர்கள் மற்றவர்களை விட விரைவாக தூங்கியதும், நீண்ட நேரம் இடையூறு இல்லாமல் ஆழ்ந்த உறக்கம் பெற்றதும் கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, கால்களை சூடாக வைத்திருப்பது உடல் வெப்ப சீராக்கத்தை மேம்படுத்தி இயற்கையான தூக்க செயல்முறையை தூண்டும். எனவே, குளிர் காரணமாக தூக்கம் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த எளிய பழக்கம் பயனுள்ளதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.