மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் கடந்த மே 27 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் தந்தை, எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தைகளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக குறித்த நபரை சரீரப் பிணையில் விடுவிக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (01) உத்தரவிட்டிருந்தது. எனினும், அவரை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராததால் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 27 ஆம் திகதி விடுதியின் அறையில் இருந்த கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததன் காரணமாக ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறி இரு பிள்ளைகள் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தாலும், பின்னர் அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாயாருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி, போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அக்குரஸ்ஸை பகுதியைச் சேர்ந்த தந்தை கடந்த மே 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலதிக அரச பகுப்பாய்வுக்காக உடல் உறுப்புகளும் அனுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து மே 30 ஆம் திகதி சடலங்கள் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் அவற்றை தனது சொந்த ஊரான மாத்தறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த தம்பதியரின் திருமணம் 2020 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், மூத்த குழந்தைக்கு 8 வயது என குறிப்பிடப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மூன்று குழந்தைகளும் உண்மையில் அவர்களது பிள்ளைகள்தானா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு நீர்கொழும்பைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினருடன் தொடர்புகள் இருக்கக்கூடும் என புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
