2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தர (A/L) கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இம்முறை பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,790 ஆக பதிவாகியுள்ளதாக கூறினார்.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்களின் பெறுபேறுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பாடத்தில் 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 69.07 சதவீதமாக இருந்தது. அதேவேளை, கணிதப் பாடத்தில் 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த ஆண்டு அந்த வீதம் 71.06 சதவீதமாக பதிவாகியிருந்தது.
இந்த பெறுபேறுகள் மாணவர்களின் கல்வித் திறன் முன்னேற்றத்தையும், குறிப்பாக விஞ்ஞான மற்றும் கணிதத் துறைகளில் காணப்படும் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
