இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்: இந்தியாவில் க்யூ பிரிவு நடவடிக்கை



 தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை இந்தியாவின் க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம், நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, க்யூ பிரிவு பொலிஸார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் உள்ள வாடையில், பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் ஏற்றப்பட்டு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கவனித்த கடத்தல் கும்பல் பொலிஸாரை பார்த்ததும் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு இருந்து 42 மூட்டைகளில் இருந்த வாசனை சவர்க்காரங்கள் மற்றும் 11,520 செம்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் கும்பலை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.