பலத்த காற்று – கடல் கொந்தளிப்பு: சிவப்பு எச்சரிக்கை வெளியீடு!!!!



 வளிமண்டலவியல் திணைக்களம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) காலை 10.30 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் நிலைமை மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.