டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டண உயர்வு விவாதம் தீவிரம்! – அமைச்சில் அவசர கலந்துரையாடல்.



 டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்ததைத் தொடர்ந்து தனியார் பேருந்து கட்டணங்களை மாற்றுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (04) காலை நெடுஞ்சாலைகள் அமைச்சுயில் நடைபெற்றுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையை காரணமாகக் கொண்டு, கடந்த மே மாதம் 3 ஆம் திகதி 10 ரூபாயினாலும், 30 ஆம் திகதி மேலும் 15 ரூபாயினாலும் லங்கா வெள்ளை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்குள் டீசல் லீற்றர் ஒன்றுக்கு மொத்தமாக 25 ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக போக்குவரத்து தொழிலை தொடர்வது கடினமாக உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, 5% இடைக்கால பேருந்து கட்டண உயர்வு அல்லது எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை அமைச்சுக்கு வந்த பேருந்து சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயலாளருடன் சுமார் 15 நிமிடங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். விரைவில் அமைச்சருடன் நேரடி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலுக்குப் பின் கருத்து தெரிவித்த லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போதைய நிலைமை தொடர்ந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தார்.