களுத்துறை பொலிஸ் பரிசோதகர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது – ஆணைக்குழு நடவடிக்கை.

 


களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இந்த பிரிவில் கடமையாற்றிய குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி, ஒரு வர்த்தகருக்கு சொந்தமான வாகனம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டிருந்தார்.

அந்த விசாரணையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகநபர் ஏற்கனவே ரூ.1 இலட்சம் பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள ரூ.9 இலட்சத்தை பெற்றுக்கொள்ள களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.