பல மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்ப்பு.



 இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (25) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.