தெற்காசியாவில் அமைதி வளர்ச்சியில் இலங்கை முன்னிலை.

 


2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டில் (Global Peace Index) இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 இடங்கள் முன்னேறி உலகளவில் 67வது இடத்தைப் பெற்றுள்ளது.

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், நாடுகளின் பாதுகாப்பு நிலை, சமூக ஸ்திரத்தன்மை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதல்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையாகக் கொண்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, உலகளாவிய அமைதி தொடர்ந்து 12வது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக அமைதி நிலை 0.7 சதவீதம் குறைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் உலகளாவிய அமைதிக் குறியீட்டின் வரலாற்றில், அந்நாண்டுடன் ஒப்பிடுகையில் 119 நாடுகள் தற்போது

குறைந்த அமைதியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

163 நாடுகள் உள்ளடக்கப்பட்ட இந்த தரவரிசையில், ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

மறுபுறம், ரஷ்யா உலகளவில் கடைசி இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சூடான் 162வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 99 நாடுகளில் அமைதி நிலை குறைந்துள்ள நிலையில், 62 நாடுகள் தங்களது அமைதி நிலையை மேம்படுத்தியுள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில், அமைதி வளர்ச்சியில் அதிக சதவீத முன்னேற்றத்தை இலங்கை பதிவு செய்துள்ளது. 2.3 சதவீத வளர்ச்சியுடன் இலங்கை பிராந்தியத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பூட்டான் முதலிடத்தில் உள்ளது.

அதேவேளை, தெற்காசியாவில் குறைந்த அமைதியைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளதுடன், இந்தியா அந்தப் பிராந்தியத்தில் ஐந்தாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.