கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி இடம்பெற்ற ஐந்து பேர் கொலைச் சம்பவத் தொடருடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகவே அவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக நீண்டகால விசாரணைகளுக்குப் பிறகே CID இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
CID நீதிமன்றில் சமர்ப்பித்த தகவலின்படி இடம்பெற்ற சில சம்பவங்கள்:
- 2008 ஜனவரி 09: மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேர் T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளார்.
- 2008 மே 22: காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- 2008 ஆகஸ்ட் 20: வவுணதீவு பொலிஸ் பிரிவில் கொத்தியாபொல, கண்ணன்குடா பகுதியில் ஒருவர் ஆயுத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தகவலின்படி, முதல் சந்தேகநபர் விசாரணை ஆரம்பத்துக்கு முன்பே நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, 2025 ஆகஸ்ட் 13 மற்றும் நவம்பர் 13 முதல் CID காவலில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்படுகின்றனர்.
இதில் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார். அவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
.jpeg)