பிள்ளையான் விளக்கமறியலில்: 5 பேர் கொலை வழக்கு விசாரணை தீவிரம்.

 



கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து பேர் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

T-56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி இடம்பெற்ற இந்த தொடர் கொலைச் சம்பவம் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த ஐந்து கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.