இணையவழி பணப் பரிமாற்றம் மூலம் போதைப்பொருள் வியாபாரம்.



 இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் பெற்றுக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹேஷ், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 351,200 பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் ஆகியவையும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.