காணாமற்போனோர் தொடர்பான தகவல் சேகரிப்பு: OMP ஆணையாளர் முக்கிய விளக்கம்


காணாமற்போனவர்கள் தொடர்பாக இதுவரை 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக OMP தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் செயல்பட்டு வருவதாகவும், இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியவற்றின் வழிகாட்டல்களின் கீழ் முற்றிலும் சட்டபூர்வமாக இயங்குகிறது எனவும் தெரிவித்தார்.

அரசாங்க நிதியுடன் இயங்கினாலும், இது எந்தவொரு இராணுவம், காவல்துறை அல்லது அரசியல் தரப்புக்கும் சார்பாக செயல்படாத சுயாதீன ஆணைக்குழுவாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உண்மையை வெளிக்கொணர்ந்து, நீதி நிலைநாட்டுவதே அதன் பிரதான நோக்கம் எனவும் தெரிவித்தார்.

தற்போது OMP செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் மாவட்ட மட்ட அமர்வுகளில் மக்கள் அதிகளவில் பங்கேற்கின்றனர் என்றும் அவர் கூறினார். தினசரி 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், சுமார் 85க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரில் வந்து தகவல்களை வழங்கி வருகின்றனர்.

மக்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்கி உண்மையை வெளிப்படுத்த ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.