கடவத்தை பகுதியில் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருள் தொகையுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (19) கடவத்தை, புனித அந்திரேயா அக்வில்லினோ தேவாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 6 கிலோ 288 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், போதைப்பொருளை எடைபோட பயன்படுத்தப்பட்ட மின்சார தராசு, கடத்தல் நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆரம்ப விசாரணைகளின் படி, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பல்களுடன் தொடர்புடைய ‘பொடி சுரேஷ்’ மற்றும் ‘சங்க சமீர’ ஆகியோரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் முக்கிய உறுப்பினராக சந்தேகநபர் செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணேமுல்ல, கேந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
.jpeg)