இறுதி உடன்பாட்டை நோக்கி அமெரிக்கா - ஈரான் முன்னேற்றம்.



 போர் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் இரவு முழுவதும் நீடித்துள்ளன.

கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், 60 நாட்களுக்குள் விரிவான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

பேச்சுவார்த்தைகளில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, தெற்கு லெபனானில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான முக்கிய விடயங்களை தெளிவுபடுத்துவது ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, லெபனானில் இஸ்ரேலுடன் தொடரும் மோதல்களின் பின்னணியில், ஹிஸ்புல்லா அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அந்த எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், தேவையானால் போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் நடைபெறும் இந்த சந்திப்புகள், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப மற்றும் அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளமாக அமையும் என அமெரிக்க தரப்பைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.