வெசாக் வாரத்தில் சட்டம் கடுமையாக அமுல்.

 


வெசாக் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெசாக் வாரத்தின் போது கலாசாரத்திற்கும் மதப்பண்பாட்டிற்கும் பொருந்தாத வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொலிஸார் நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டத்துடன், போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தையும் தயாரித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களை மையப்படுத்தி சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகளும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அலட்சியமாக அல்லது அபாயகரமாக இயக்கப்படும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் குறித்து பொதுமக்கள் 070-4755600 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது 119 மற்றும் 188 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.