போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவியில் மாற்றம்?

 


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தீர்மானம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவர் அறிவித்துள்ளதாகவும், செயலாளர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கும் உத்தியோகபூர்வமாக தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பேராசிரியர் கபில பெரேரா மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணையத் தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.