அபுதாபியில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள் நாடு கடத்தல்.



 ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள், அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தங்களது கைப்பேசிகளில் வைத்திருந்ததுடன், அவை தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்தும் கருத்துகளை பதிவிட்டும் இருந்ததாகக் கூறி இவர்கள் அபுதாபி பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அம்பலாங்கொட, மாரபன, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.