அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தாம் திருப்தியடையவில்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் உண்மையில் அந்த இலக்கை அடைவார்களா என்ற நம்பிக்கை தமக்கில்லை என அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஈரான் தனது புதிய பேச்சுவார்த்தை முன்மொழிவை பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், அந்த முன்மொழிவின் உள்ளடக்கம் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு மற்றும் ஐயப்பாடு இரண்டும் ஒருங்கே நிலவுகின்றன.
பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ள நேரடி பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், பாகிஸ்தானையும் அதன் தலைவர்களையும் தாம் மதிப்பதாக கூறியுள்ளார். இந்த நிலைமையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறையுமா அல்லது மேலும் தீவிரமாவதா என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவினைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
