ட்ரம்பின் சீன விஜயம் இன்று ஆரம்பம்: உலக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் சந்திப்பு

 


அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன்று (13) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முதல் சீன விஜயம் இதுவாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகளில் இந்த விஜயம் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் தென்கொரியாவின் Busan நகரில் நடைபெற்ற Asia-Pacific Economic Cooperation Summit மாநாட்டில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping சந்தித்த பின்னர், இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இந்த விஜயம் அமைகிறது.

மேலும், 2025 ஜனவரி 20 ஆம் திகதி தனது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தை தொடங்கிய பின்னர், ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் சீன பயணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது, ஈரானை மையமாகக் கொண்ட அமெரிக்கா – இஸ்ரேல் போர் நிலைமை, உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.