இலங்கையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – சில பகுதிகளுக்கு கடும் மழை எச்சரிக்கை

 


இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழைக்காலநிலை அடுத்த சில மணித்தியாலங்களிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை உருவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவசியமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.