மாத்தறையில் பெரும் நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு – ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிம்மதி

 இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அமையும் வகையில், மாத்தறை மாவட்டத்தின் ஊருபொக்க பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்த முக்கியமான கண்டுபிடிப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது.




பஸ்கொட பிரதேச சபைக்குட்பட்ட பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வந்தனர். சிறிய வறட்சி நிலவினாலும் கூட அப்பகுதியில் உள்ள கிணறுகள் வற்றிப்போவதால், மக்கள் குடிநீருக்காக பவுசர் சேவைகளையே நம்பியிருந்தனர். இதனால் ஊருபொக்க நகரம், தம்பஹல வீதி, ஹுலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹேன்கொட, ஹொரகஸ்மண்டிய, கடுவன வீதி மற்றும் கீரபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்த நீர் தட்டுப்பாடு அப்பகுதியிலுள்ள ஹீகொட வைத்தியசாலை மற்றும் பல பாடசாலைகளின் அன்றாட செயல்பாடுகளையும் பாதித்திருந்தது. பஸ்கொட பிரதேச சபையின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வுகளின் பலனாகவே இந்த நிலத்தடி நீர் வளம் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய நீர் ஆதாரம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகே தலைமையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் அந்தப் பகுதியின் வாழ்வாதாரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் பெரிதும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.