பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி – தொடரை 2-0 என கைப்பற்றி அபார சாதனை

 



பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது.

நேற்று (30) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்ஷிதா சமரவிக்கிரம 49 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து 42 ஓட்டங்களையும் பெற்றுத் திறமையை வெளிப்படுத்தினர்.

155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் கவிஷா தில்ஹாரி சிறப்பாக விளையாடி 15 ஓட்டங்களை மட்டும் வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும், இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் பலவும் ரன் அவுட் முறையில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த டி20 தொடரில் கிடைத்த வெற்றி அணியின் ஆட்டத் திறனை மேலும் உறுதிப்படுத்துகிறது.