ஜனாதிபதி அநுர முன்னிலையில் இன்று தேசிய நினைவேந்தல் நிகழ்வு



 யுத்த வெற்றியின் 17ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையிலுள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி Anura Kumara Dissanayake பிரதம விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி. கொஹோன, இந்த ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு விசேட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து முப்படைகளில் சேவையாற்றி உயிரிழந்த தமிழ் மற்றும் முஸ்லிம் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்காக சுமார் 30 உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு ஜனாதிபதியுடன் இணைந்து மரியாதை செலுத்தும் வாய்ப்பு இந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, படை வீரர்கள் சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் குரூப் கேப்டன் எல்.எம்.சி.டி. நிஸங்க தெரிவித்ததாவது, இந்த நினைவேந்தல் நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், படைவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 2,769 பேர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், படைவீரர்களின் பெற்றோர்களில் 160 பேருக்கு பிரதான நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்வு மாலை 6.45 மணியளவில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டது.