கடல் அலையில் சிக்கிய படகு: அதிபர் பலி.

 


நயினாதீவு கடற்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் பயணிகள் படகை தவறவிட்டதையடுத்து, கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகில் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில், அவர்கள் பயணித்த படகு கடல் அலையில் சிக்கியுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில், படகில் இருந்த பாடசாலை அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக செயற்பட்ட படகோட்டி அவரை மீட்க முயற்சித்த போதிலும், அதிபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.