விமான நிலைய பசுமை வழியில் சிகரெட் கடத்த முயன்ற 3 பேர் கைது.



 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், விமான நிலையத்தின் பசுமை வழி (Green Channel) ஊடாக சிகரெட்டுகளை கடத்திச் செல்ல முயன்றபோது சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், குறித்த சிகரெட் தொகையை சீனாவில் இருந்து கொள்வனவு செய்து முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 சிகரெட் பெட்டிகளில் மொத்தமாக 40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.