மட்டக்களப்பு தீ விபத்து: பிள்ளைகளின் தந்தை கைது.



 மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் தந்தை என கூறப்படும் நபரை பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்த பிள்ளைகளின் தாய்க்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி குழந்தைகளுடன் யாசகத்தில் ஈடுபட்டு மோசடி செய்துவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய்க்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தாயை பார்வையிடுவதற்காக, சந்தேகநபர் தனது இரண்டு பிள்ளைகளுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலின் போது, 3 வயதுடைய ஆண் குழந்தையும் 5 வயதுடைய பெண் குழந்தையும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் பயன்படுத்திய அடையாள அட்டையை பொலிஸார் பரிசோதித்தபோது, அது வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டையின் உண்மையான உரிமையாளர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும், அவரது அடையாள அட்டை 2023ஆம் ஆண்டு காணாமல் போன பின்னர் புதிய அடையாள அட்டையை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த கைதான நபர், அந்த அடையாள அட்டையை தனது அடையாளமாக பயன்படுத்தி பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தாலும், அது பொய்யான தகவல் என்றும், அவரது மனைவி தற்போது மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பல பகுதிகளில் தனது மனைவிக்கு புற்றுநோய் என கூறி யாசகம் செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சந்தேகநபரை நேற்று இரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவரது தாயாரையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.